என்ன சொல்வது ? பல மாதங்களுக்குப் பிறகு புதிர்களுடன் கூடிய ஓர் அட்டகாசமான ஹாரர் திரைப்படம். எல்லாப் புதிர்களுக்கும், படத்துக்குள்ளேயே பதில் இருக்கிறது. ( டிரெய்லரில் வரும் காட்சிகள், படம் பற்றிய குறைந்த பட்ச பேஸிக் ஒன்லைன். இதைத் தாண்டி எந்த ஸ்பாய்லரும், அடுத்த நான்கு பத்திகளில் இருக்கப்போவதில்லை, என்பதால் தொடர்ந்து படிக்கலாம் )
அந்த வீட்டில் இருக்கும் வயதான பெண் (எல்லன் ) இறந்து போகிறார். எல்லன் தன் மகள் ஆனியின் வீட்டில் வசித்து வந்தார். எல்லனின் இறப்புக்குப் பின்னர், ஆனியின் வீட்டில் பல துர்சம்பவங்கள் நிகழ்கின்றன. தன் பரம்பரையைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் அறிந்துகொள்ளும் ஆனி, அங்கிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடுகிறாள். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை இரண்டு மணி நேர ஹாரர் த்ரில்லராகத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏரி ஏஸ்டர்.
லாங் ஷாட்டில் ஒரு வீட்டின் மினியேச்சர் காட்டப்படுகிறது. மினியேச்சருக்கு அருகே கேமரா செல்ல செல்ல, அந்த மினியேச்சர் வீட்டுக்குள் ஒளி பாய்ச்சப்படுகிறது. மினியேச்சர் வீடு சட்டென, நிஜ வீடாக மாறுகிறது. அங்கு படுத்திருக்கும் மகன் பீட்டரை எழுப்புகிறார் ஆனியின் கணவர். அடுத்த காட்சி கல்லறையில் நடக்கிறது. தரைக்கு அடியேயும் கேமரா சென்றுகொண்டே இருக்கிறது. “பாட்டியும் இல்லை இனி என்னை யார் பார்த்துக்குவா ” எனக் கேட்கிறாள் சார்லி. “நான் இருக்கேன்ல” என்கிறார் ஆனி. “நீ இறந்துட்டா ” என கேசுவலாக கேட்கிறாள் சார்லி. நிஜ உலகின் சம்பவங்களிலிருந்து மினியேச்சர் செய்யும் ஆனி, தான் தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் ஓர் உருவத்தின் மாதிரியைச் செய்து கொண்டே இருக்கும் சார்லி. பள்ளியில் பீட்டருக்கு அருகே இருக்கும் கண்ணாடியில் அவனது முகம் வேறுமாதிரி தெரிகிறது. திடீரென பீட்டர் தன்னைத்தானே, மேஜையில் அடித்துக்கொள்கிறான். சார்லி நினைத்ததும், ஒரு புறா கண்ணாடி சுவரில் மோதி இறந்துபோகிறது. அதன் தலையை வெட்டி எடுக்கிறாள் சார்லி. இப்படி டிரெய்லரில் வரும் காட்சிகள் மட்டும் நமக்கு ஆயிரம் கதை சொல்கின்றன,
மினியேச்சர் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோனி கொல்லெட் ( ஆனி), தன் ஆகச்சிறந்த நடிப்பை படத்தில் வழங்கியிருக்கிறார். மகள் சார்லி பற்றி வருந்துவதாகட்டும், மகன் பீட்டரிடம் புலம்புவதாகட்டும், இறுதியில் மொத்தக் குடும்பத்தையும் நம்ப வைக்க அவர் செய்யும் விஷயங்கள், முகபாவனைகள் எல்லாம் வேற லெவல்.
சிறுமி சார்லியாக வரும் மில்லி ஷப்ரியோவுக்கு இதுதான் முதல் படம். பார்த்த மாத்திரத்தில் சிலரின் முகமும் செய்கையும், நம்மையும் அறியாமல், நம்முள் ஒரு பயத்தை விதைக்குமே, அப்படியான முகம் சார்லிக்கு. எப்போதுமே எதையோ தொலைத்துவிட்டு தேடும் முகம் பீட்டருக்கு.
படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்துக்குள்ளும் பல அடுக்குகளுக்கான குறியீடுகளுடன் கதை மெள்ள மெள்ள மெருகேறுகிறது. எல்லோரும் எல்லோரிடத்திலும் ஏதோவொரு பொய் சொல்கிறார்கள். ஒரு ஹாரர் படத்தில், இப்படிப் பல வசனங்கள் `அட’ சொல்ல வைத்தது இதற்கு முன்னர் எதில் என நினைவுக்கு வரவில்லை (கடந்த 10 ஆண்டுகளில்). ஓர் இயக்குநர் தன் முதல் படத்திலேயே இவ்வளவு அற்புதமாக ஷாட் செலக்ஷன், வசனம் எழுத முடியுமா என அதிசயிக்க வைக்கிறார் ஏரி ஏஸ்டர். கொலின் ஸ்தேத்ஸனின் இசை, பவர் பொகெல்ஜெல்ஸ்கியின் ஒளிப்பதிவு இரண்டும் ஹாரர் கதைக்கு ஈடுகொடுத்து, நம்மைக் கரம் பிடித்து கதைக்குள் இழுத்துச் செல்கிறது.
படம் சற்று ஸ்லோ, என்பதைக் கடந்து, திரையை விட்டு வெளியே வரும்போது கேள்விகளை எழுப்பிக்கொண்டே வருகிறது #hereditary. அவற்றுள் சில கேள்விகளுக்கான விளக்கங்கள் கீழே …
படம் பார்க்க விரும்புபவர்கள், படத்தைப் பார்த்துவிட்டு, இதற்குக் கீழே இருக்கும் சில விளக்கங்களை தேவை இருப்பின் படிக்கவும்… (SPOILERS AHEAD)
* எல்லனின் வம்சாவளி, Paimon பேயிமான் என்னும் கடவுளை வணங்குகிறார்கள் பேயிமானின் ஆன்மா, தங்குவதற்கு ஓர் ஆண் உடல் தேவைப்படுகிறது. பேயிமானை நம்பும் மக்களுக்கு எல்லன்தான் ராணி. எல்லனின் மகனை அதற்கு அவர்கள் தயார் செய்யும் சூழ்நிலையில் அவன் தற்கொலை செய்துகொள்கிறான். அடுத்த ஆண் உடலுக்காகக் காத்திருக்கிறாள் எல்லன்.
* இதைப்பற்றி எல்லாம் அறிந்தும் அறியாதது போல் இருக்கிறாள் ஆனி. அவளுக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது. ஒரு காட்சியில் பீட்டரிடம், “எனக்குக் குழந்தைகளே வேண்டாமென நினைத்திருந்தேன். ஏன் உன்னைக்கூட தவிர்க்கப் பார்த்தேன்” என்கிறாள். தன்னுடைய குழந்தைகள் இதற்கு பலிகடா ஆக்கப்படுவார்கள் என்பதை முன்பே அறிந்திருந்தாள் ஆனி.
* எல்லன் புதைக்கப்பட்ட சவப்பெட்டியை யாரோ உடைத்துவிடுகிறார்கள். தலையில்லாத ஓர் உடல், ஆனியின் வீட்டில் இருக்கும் பரண் போன்ற அறையில் இருக்கிறது. எல்லன் உடலை யாரோ ஆனியின் வீட்டில் போட்டிருக்கிறார்கள். அந்த கல்ட்டை நம்பும் பலர் இன்னும் இருக்கிறார்கள், பேயிமானின் தேவைக்கேற்ப அவர்கள் செயல்படுகிறார்கள் என்பது சில காட்சிகளின் மூலம் சொல்லப்படுகிறது.
* ஆனிக்குப் பிறக்கும் இரண்டாவது குழந்தை, ஆணாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாள் எல்லன். முதல் குழந்தையான பீட்டர் பிறக்கும் எல்லன் அவர்களுடன் இல்லை என்பதை ஒரு காட்சியில் சொல்கிறார் ஆனி. அக்குழந்தையின் வருகைக்காக Charles என்று எழுதப்பட்ட கால்மிதியை, தானே செய்கிறாள் எல்லன். சார்லி பிறந்ததிலிருந்தே, பேயிமானின் கட்டுப்பாட்டில்தான் வளர்கிறாள். ஆனியின் சில வசனங்கள், சார்லி நடந்துகொள்ளும் விதம் போன்றவற்றால், இது பார்வையாளனுக்குச் சொல்லப்படுகிறது. பிறந்ததிலி ருந்து சார்லி அழுததே இல்லை என்னும் வசனமும் வருகிறது.
* எல்லன்னின் துக்க நிகழ்ச்சிலேயே, சார்லி சாக்லேட் சாப்பிடும் போது, அதில் ஏதானும் நட் Nuts வகை இருக்கிறதா என கேட்கிறாள் ஆனி. பின்னர், பீட்டருடன் செல்லும் பார்ட்டியிலும், சார்லி வேகமாக சாக்லேட் கேக் வகைகளை உண்கிறாள். அதிலிருக்கும் Nuts கூட சார்லியின் சுவாசக்குழாயில் பிரச்னைகள் ஏற்படுத்தி, அவளை கொன்றிருக்கக்கூடும். அவளது உடலைவிட்டு வெளியேறி, ஓர் ஆண் உடலை எடுக்க வேண்டுமென்பது தான் பேயிமானின் ஆசையும் கூட.
* SATAN , சாத்தானின் சில குறியீடுகள் போன்றவை படம் நெடுக வருகின்றன.
* நிஜ உலகில் தான் பார்க்கும் சம்பவங்களை வைத்து மட்டுமே, மினியேச்சர் செய்யும் ஆனி, பல்வேறு விஷயங்களை மினியேச்சர் மூலமே கடத்துகிறாள். எல்லன், சார்லிக்கு தான்தான் பால் தர வேண்டும் என நிர்பந்தப்படுத்தியது; சார்லியின் தலை துண்டிக்கப்பட்ட உடலையும் ஒருமுறை மினியேச்சராகச் செய்து வைத்திருப்பாள் ஆனி.
* பேயிமானை நம்பும் கல்ட் வகையினருள் ஒருவரான ஜோஆன், ஆனிக்கு அறிமுகம் ஆகிறாள். தன் குடும்பத்திலும் இழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றதெனப் புலம்புகிறாள். பேயிமானை மீண்டும் உயிர்த்தெழ செய்ய வேண்டும் என்பதற்காகவே, ஆனியுடன் நட்பாகிறாள் ஜோஆன். அதை, பின்வரும் சில காட்சிகளில் புரிந்துகொள்கிறாள் ஆனி.
* தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கும் ஆனி, ஒருமுறை தன் இரு குழந்தைகளையும் தீயிட்டுக் கொல்ல முயற்சி செய்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது. பீட்டர் அதனாலேயே ஆனியை ஆரம்பத்திலிருந்தே வெறுக்கிறான்.
* படத்தின் இறுதியில் பீட்டரின் உடலுக்குள் பேயிமான் முற்றிலுமாக நுழைந்துவிட்டான் என்கிறார்கள். பேயிமான் போன்ற குறிப்பிட்ட சில கடவுள்களை நம்பும் கல்ட், நரபலிகொடுத்தல் போன்றவை இன்னும் இருக்கிறது என்பதால், இதை வெறும் கற்பனையாக மட்டும் கருதமுடியவில்லை. இதுமாதிரியான கல்ட் கடவுள்கள் உலகம் முழுக்கவே இருக்கின்றார்கள். இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியின் மனைவியும், நடிகையுமான ஷேரான் கேட்டைக்கூட ஒரு கல்ட் பிரிவினர்தான் கொன்றனர். தமிழில் வெளிவந்த கல்ட் சினிமா என்றால், சிவப்பு கலர் உடைகளில் தோன்றும் சங்கிலி முருகன் அணியும் அதை வெல்லப் போராடும் ரஜினி நடித்த கழுகு திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது.
Pic Credit : From Old Books
இது மாதிரியான கல்ட் குழுக்களை படம் முழுக்க மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இயக்குநர் காட்டுகிறார். படத்தில் வரும் சில வசனங்களில் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பற்றியும் சில வரிகள் வருகின்றன. எல்லன் மனநோய் பாதிக்கப்பட்டவளாகச் சொல்கிறார், ஆனியின் சகோதரர் ஸ்கீஸோபெர்னியாவில் பாதிக்கப்பட்டு இறந்ததையும், சார்லி மனவளர்ச்சிக் குறைபாடுடையவள் என்று ஒரு வசனமும், ஆனியை நீ மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாய் என ஸ்டீவ் சொல்வார். மனநோய் மரபு சார்ந்து வரலாம் என்பதைப் போலவே, இந்த கல்ட்டும் மரபாக பரவுகிறது என்பதை உணர்த்தும்படியாகவே பீட்டரின் பார்வையுடன் படமும் முடிகிறது. கல்ட் குழுக்களும் மனநோயும் பெரும்பாலும் ஒன்றுதான் என்பதை இயக்குநர் நிறுவ முயல்கிறாரோ என்னவோ என்னும் கேள்வி எழாமல் இல்லை.